உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து பிரான்சில் அசாத் மௌலானாவிடம் CID வாக்குமூலம் பதிவு,

-சூத்திரதாரி மற்றும் ஒப்பந்தக்காரர் சுரேஷ் சலே, பிள்ளையானின் தொடர்புகளும் அம்பலம்

-யாருடைய தேவைக்காகச் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது, கோட்டை நீதவான நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் (சத்தியநாதன்) உள்ளிட்ட பிரதிவாதிகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி செய்ததோடு, இந்தத் தீவிரவாதக் குழுவினரையும் பராமரித்து வந்துள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக இருந்த அசாத் மௌலானா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பிரான்ஸிற்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

2017ஆம் ஆண்டு முதல், சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவினருக்குத் தேவையான ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழ்ச்சிகளில் சுரேஷ் சலே ஈடுபட்டிருந்ததாக அசாத் மௌலானாவின் வாக்குமூலம் வெளிப்படுத்தியுள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட குழுவினருக்கும், சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதக்

குழுவினருக்கும் இடையிலான தொடர்புகளைப் பேணுவதில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு முக்கியப் பங்காற்றியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களான பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க, உபாலி தென்னகோன், கீத் நோயர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரவீந்திரநாத் மற்றும் சிவராம் உள்ளிட்டோரின் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான குற்றங்கள் இக்குழுவினரால் இழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டிற்குப் பிறகு தனக்கும் பிள்ளையான் குழுவிற்கும் இடையே தொடர்பு இல்லை என்று சுரேஷ் சலே கூறினாலும், தாக்குதலுக்குப் பிறகு அஹுங்கல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் பிள்ளையான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருந்து அளித்ததாகச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருந்தின் விவரங்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளில் (Logbook) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


இத்தாக்குதலுக்கான திட்டமிடல் பல ஆண்டுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டது என்றும், தொடக்கத்தில் இராணுவக் குழுவொன்றைத் தாக்குவதே நோக்கமென்ற போதிலும், பின்னர் உயிர்த்த ஞாயிறுத் தினத்தைத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்தனர் என்றும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. இத்தாக்குதலின் மூலம் கத்தோலிக்கப் பக்தர்களை அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.


மேலும், சந்தேக நபர்கள் உயிரிழக்கும் மற்றும் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்தும், விசாரணையில் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தியும், சுரேஷ் சலேயை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி முன்நகர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.









Copyright 2026 © Ceylon Flash News - All Rights Reserved

info.cfnnetwork@gmail.com







Post a Comment

0 Comments