அட்டாளைச்சேனை முதல் சம்மாந்துறை வரையான ப.நோ.கூ. சங்க காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்க நடவடிக்கை
(கே எ ஹமிட்)
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று (20) நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் நெல் களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதனால் கூட்டுறவு சங்கங்களின் வருமானங்களை அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு உள்ளூரில் நெல்லை விற்பனை செய்யும் நிலமையும் உருவாகும் எனவும் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்வகுவதற்கும் ஏற்கனவே டீசல் (மட்டும்) நிரப்பு நிலையம் அமைந்துள்ள நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு பெட்ரோல் நிரப்பும் நிலையத்தினை வழங்குவது ஊடாக கூட்டுறவு சங்கங்களின் வருமானங்களை அதிகாரிகலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் குறிப்பிட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் முன்மொழிவு தொடர்பாக விளக்கமளிக்குமாறு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கலாம் எனவும் நிதி இல்லாத நிலை உள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் 30 வருட யுத்த சூழ்நிலையால் கூட்டுறவு சங்கங்களுக்கு பாரிய அளவில் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவு அமைச்சின் நிதிகளை வழங்கி கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும். என அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் நெல் களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், நெல் உலர்த்தும் இயந்திரம் பொருத்துவதற்கான திட்ட முன்மொழிவு ஆகியவைகளை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஊடாக சமர்ப்பித்து கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் இவ்வேலைத்திட்டங்களை சிபாரிசு செய்து அமைச்சுக்கு அனுப்புமாறும் பணிப்புரை வழங்கினார்.
அட்டாளைச்சேனை, நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
0 Comments