முதலமைச்சர் வேட்பாளர் கோரிக்கை - ஏற்றுக் கொள்வாரா தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ மேயருமான அதாஉல்லா?


( ஏ.எல்.றமீஸ் )

இந்தியாவின் பெரும் அழுத்தங்களுக்கு அரசாங்கம் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறுபான்மை சமூகத்தினரால் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் பலமான கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்திருந்ததுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி என்றுமே இல்லாதவாறு  வெற்றியை பதிவு செய்திருந்தது.

மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு அமையும் . அதன் மூலம் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும்   என்பது அரசியல் விமர்சகர்களின்  கேள்வியாக உள்ளது.

குறிப்பாக பல்லின  சமூகங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனித்து ஒரு கட்சியால் அல்லது ஒரு சமூகத்தால் ஆட்சியை கைப்பற்ற முடியுமா? .

கிழக்கு மாகாணத்தின் வாக்குகள் சமூக ரீதியாகவும் கட்சிகள் ரீதியாகவுமே பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளும். முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்ட போது  தங்களின் கோட்டையாக கருதப்பட்ட பல இடங்களில் கடும் தோல்வியை சந்தித்திருந்தனர்.

இப்படியான ஒரு தோல்வி மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதோடு சர்வதேச ரீதியாக பெரும் தாக்கத்தையும் கனமான பின்னடைவுகளையும் இலங்கையின் இரண்டு சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிர்நோக்க வேண்டி வரும்.

அதி கூடிய வாக்குப் பலத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரங்களை முஸ்லிம் சமூகம் தனதாக்கிக் கொள்ள முடியும். அந்த வாய்ப்புக்களை நோக்கி நகர்வதுதான் சமூகத்தின் ஆரோக்கியமான எதிர் காலமாகும்.

முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் இருக்கின்ற சிறு சிறு முரண்பாடுகளை கலைந்து  ஒரு மையப் புள்ளியில் ஏதோ ஒரு பெயரில் ஒன்றிணைய வேண்டும்.

அப்படியான ஒரு தொடக்க புள்ளி கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்களின் பெரும்பான்மையை உயர்த்தி நிற்கும்.

இது தொடர்பாக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவிடம் சமூகவியலாளர்கள் கலந்துரையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் உண்மைத் தன்மையை அறிய முற்பட்ட போது  ஒரு முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர் குறிப்பிடுகையில் அதாஉல்லா இதற்கு இணக்கம் தெரிவிக்கும் போதுதான் எதுவுமே சாத்தியம் என்றார். மேலும் அவர் கூறுகையில் பொருத்தமான முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா மாத்திரமே உள்ளார் என்றார்.

இக் கேள்விகளுக்கு தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அதாஉல்லா அவர்களிடம் தான் விடைகள் உள்ளன. 

சமூக நலன் சார்ந்து அப்படியொரு வாய்ப்பு ஏற்படும் போது அதாஉல்லா தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் விருப்பமாகவுள்ளது.

அதாஉல்லாவின் இணைவு கிழக்கு மாகாணத்தில் பெரும் பேரெழுச்சியை ஏற்படுத்துவதோடு முறையான  சமூக அபிவிருத்திக்கும்  அது வழிகோலும். 

Post a Comment

0 Comments