மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாட்டில் நீண்டகாலமாக பல்வேறு அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்கள் காலதாமதமாகியுள்ள சூழ்நிலையில், மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முறைமை குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, ஒருமித்த தீர்வொன்றை எட்ட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னெடுப்பின் பேரில், மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதனை ஆராய்ந்து, அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு 2026 மே 26 ஆம் திகதி, கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (HARTI) வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஜனநாயக செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய தரப்புகள் பங்கேற்கின்றனர்.
மாகாண மக்களின் ஜனநாயக உரிமைகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகின்றேன். தேர்தல்கள் தாமதிக்கப்படுவது என்பது மக்களின் பிரதிநிதித்துவ உரிமையை மறுக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே, தேர்தலை மேலும் தாமதிக்காமல் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்து வெளிப்படையான மற்றும் பொறுப்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில், எந்த தேர்தல் முறைமையானது மக்களின் விருப்பத்தையும், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் பாதுகாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காக அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
இந்த கலந்துரையாடலின் மூலம் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நாட்டின் ஜனநாயக நலனுக்காக ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
0 Comments