போதைப்பொருளுடன் இருவர் கைது.!
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் நீண்ட காலமாக
போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசியத்தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த தகவலுக்கமைய சனிக்கிழமை (23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சாய்ந்தமருது-14 பிரிவில் வதியும் சந்தேக நபர் 2,220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட போதைப்பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகைப்பணத்துடன் கைதானார்.
இதே வேளை, மற்றுமொரு சந்தேக நபர் மாவடிப்பகுதியில் வைத்து கைதானார். அச்சந்தேக நபர் வசமிருந்து ஹெரோயின் 2,300 மில்லி கிராம் உட்பட ஐஸ் போதைப்பொருள் 60 மில்லி கிராம் பக்கேற் 2 உம் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்ட்டதுடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகைப்பணமும் மீட்கப்பட்டது. மேற்குறித்த பணம் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையில் குறிப்பிட்டனர்.
மேலும், இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப்பொறுப்பான பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் அவர்களின் வழிகாட்டுதலின் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
மேலும் , இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments